கடந்த காலங்களில், உயர்நிலைக் கல்வி குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடையே மிகக் குறைவாக இருந்தது மற்றும் பள்ளிக்குப் பிறகு இதுபோன்ற கல்வி முறை உள்ளது என்பதை அறியும் தளங்கள் மிகக் குறைவு. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
மாணவர்களை பாடசாலைவாரியாக தொழிநுட்ப பயிற்சி நிலையங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று அந்த அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்குவது மிகச் சிறப்பான ஒர் முன்னெடுப்பாகும்.
இச்செயற்பாடு தொடர்பான எமது விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியைப் பார்வையிட, மட்/ம.மே/மகிழவட்டுவான் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகை தந்தனர். வருகை தந்த மாணவர்களுக்கு மூன்றாம் நிலை தொழிற்கல்வி குறித்து விளக்கப்பட்டது.
மேலும் NVQ Framework, நாளைய தொழில் துறைகள் மற்றும் மாணவர்கள் எதிர்கால தொழில் துறையில் மென் திறன்களின் ஆதிக்கம் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப் பட்டது.
பெற்றோரின் மத்தியில் இன்று வரை தம் பிள்ளைகள் பல்கலைக்கழக வாய்ப்பினை தவறினால் அவர்கள் வாழ்க்கை முடிந்து விட்டதாகவும் அவர்கள் எதிர்காலம் கேள்வி குறியாக மாறிவிட்டது என எண்ணி தம் பிள்ளைகளுடன் கடுமையாக நடந்து கொள்வதனால் மனதளவில் மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் இதனால் விபரீத முடிவுகளையும் மேற்கொள்கின்றனர்.
உயர்தர பரீட்சை ஒன்றில் சித்தியடையாத மாணவன் மீண்டும் மீண்டும் பரீட்சைக்கு தோற்றுதல் சிறந்த விடயமாக காணப்படினும் அம் மாணவன் உளரீதியான பல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றான்.
ஆனால் தொழிற்கல்வி அதனை நிவர்த்தி செய்யும் மாற்று முறையாக பார்ப்போமானால் அம் மாணவன் விருப்பத்துடனான துறையின் தெரிவு அத்தோடு தனது ஆளுமைக்கேற்ற தொழிற் கல்வி ஒன்றினை பெறும் போது அங்கு காணப்படும் நடைமுறை பயிற்சி திறனை பரீட்சிக்கும் முறைமை இவையாவும் அவனை முன்னேற்ற பாதைக்கு உந்தும் காரணியாக மாறலாம்.
இலங்கையில் மொத்த தற்கொலை விகிதம் ஒவ்வொரு 1,00,000 பேருக்கும் சுமார் 15 ஆகும்.
இது உலக சராசரியை விட அதிகமாகும்.17-25 வயதுப் பிரிவில் உள்ள இளைஞர்களிடையே, குறிப்பாக இளம்பெண்களிடையே, தற்கொலை முயற்சிகளின் பரவல் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இதற்கான முக்கிய காரணங்களில் கல்வி அழுத்தம் என்பது மிகக் கவலைக்குரிய விடயமாகும்.